Pages

Scroll

"இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை! மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்!! மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்"!!!

Thursday, November 28, 2013

கவிதை--பெருந்தீ


பெருந்தீ………….

·        எங்கள் ஊர்!
பரந்து விரிந்த
பசுங்காடு.
கண்ணுக்கெட்டிய
தூரம்வரை
பசுமை போர்த்த
பூங்காடு.

·        அது!
கால்நடைகள்
காலார மேய்ந்த
ஓர் அந்திக்காலம்.

·        கூடு திரும்பும்
பறவைகள்
காற்றில்
பாட்டெழுதிச் செல்லும்.

·        மடைபாயும் வெள்ளம்
பின்னணியாய்
இசை கூட்டும்.

கவட்டை ,கிட்டிப்புல்
ஆபியம்,மணியாபியம்
பதுங்குமூஞ்சி
அப்பப்பா !
எத்தனை வகை
விளையாட்டுக்களை
அந்த வயற்காடுகள்
கண்டு களித்திருக்கும்.


·        மயங்கித் திளைக்கும்
வெட்டவெளி.
வைக்கோற்போரில்
மல்லாந்து படுத்து
அண்ணாந்து ஆகாசம்
பார்த்துக்
கிடக்கும் நம்மை
மாலை நேரத்து
விண்மீன்கள்
கண்சிமிட்டி
நேரம் காட்டும்.

எருமை மீதேறி
பயணம் செல்லும்
காகமாய்
சிலர் வீடு திரும்பும்
அழகு அலாதியானது.



·        அலுப்பும் சலிப்பும்  தட்ட,
மதகு வழிப்பாய்ந்து
வாய்க்கால் வழியோடும்
வெள்ளம்
ஆசையாய் இழுத்துச் செல்ல
இதமான குளியல்.

படிப்பும் பணியும்
வசதியும் பெருமையும்
கால்களால் அளந்த
அந்த காவேரிப்படுகை
வளமையான
செழுமைக் காடுகளின்
நினைவைச்
சுத்தமாய்த் துடைத்துப் போட்டது.

·        ஊரின் நினைவுகள்
உள்ளுக்குள்
வந்துபோகும்
நேரமெல்லாம்
நெஞ்சக் கூடு திறந்து நிற்கும்.
நினைவலைகள்  சிறகடிக்கும் .

·        இப்பொழுது
தொடர்வண்டிப் பயணங்களில்
ஊரைக் கடந்து
செல்லுகின்ற
தருணங்களிலெல்லாம்
மூளி அலங்காரி
முண்டமாய் நிற்பதுபோல்
கண்கள் நீர் வறண்டு
இமையொற்றும் வறட்சிபோல
வாய்க்கால் வரப்புகள்
குறுக்கும் நெடுக்குமாய்
கூனிக்குறுகிக் கிடக்கின்றன.


மனக் கண்ணோடும் காட்சிகள்
காலத்தின் அருமை சொல்லும்
பெருந்தீயாய் எரியும்
மலரும் நினைவுகள்
கண்களில் வானத்து விண்மீன் போல்
ஒரு புள்ளியாய்
வந்து போவது
தொடர் வண்டி வேகத்தாலல்ல
வாழ்க்கையின் அவசரத்தால்.

   

1 comment:

  1. அருமை அருமை அருமை நினையூட்டியமைக்கு மிக்க நன்றி ஐயா வாழ்க வளமுடன்..

    ReplyDelete