Pages

Scroll

"இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை! மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்!! மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்"!!!

Monday, June 2, 2014

மாடுகள்

மாடுகள்

உயிர்களின் பிறப்பில்
மாடுகள்
மகத்தானவை.

மக்களைக் காக்கும்
பணியில்
காலங்காலமாய்!
உடனிருந்து உதவும்
பணியில்
இன்றும் என்றுமாய்!

எருதுகளாய்ச் சென்று
வயலைச் செப்பனிடும்.
பசுக்களாய்ப் பிறந்து
வயிற்றுக்குப்
பாலை வார்க்கும்.
எருமைகளாய்ப் பிறந்து
ஏழைகள் வறுமை போக்கும்.

பாசத்தைப் பொழியும்
கொஞ்சம்
பக்குவமாய்ப்
பழகிவிட்டால்.

மாடுகளிலும்
சாதிகள் .
மனிதனால் தான்.

உயர் ரகங்களுகளுக்குக்
கொஞ்சம் கூடுதல்
கவனிப்பு.
உணவு முதல்
உறைவிடம் வரை.

என்றும்
நாட்டு மாடுகளே
நம்மோடிருக்கும்,
அன்போடிருக்கும்.

கோபம் வந்தால்
மனிதரைப்போல
கொஞ்சம்
முட்டிப் பார்க்கும்.

நாட்டுக் காளைகள்
தொழிலுக்கேற்பப்
பக்குவப் படுத்தப்படும்.

வண்டிமாடு,உழவுமாடு
ஏறக்குறைய
ஒரே இனம்தான்.
செக்கு மாடுதான்
இதில் தனிரகம்.

ஆரம்பத்தில்
முரண்டுபிடிக்கும்.
நுகத்தடியைச் சுமந்து
சுற்றிச் சுற்றி வரக்
காலப் போக்கில்
சுகமாய்த் தெரியும்
செக்குகளோடு பழகிவிட்ட
பாதங்களுக்கு.

இவை,
சொன்னதையே
சொல்லும்
கிளிப்பிள்ளைகள்.
தம் வலிமை
அறியாத
அப்பாவிகள்.
அவைகளுக்கு
வாய்த்த வாழ்க்கை
அப்படி
வாழவைத்துவிட்டது.

மாலை இட்ட
மணமகள்
நிலம் பார்த்து
நடப்பது போல
நுகத்தடி பூட்டிய
செக்கு மாடுகள்
தம் தடம் பார்த்தே
நடக்கப் பழகிவிட்டன.
அவிழ்த்து விட்ட பின்னும்
முன் சென்ற
பாதையைச்
சுற்றியே நடைபழகும்
தேவதைகளாக !

எண்ணெய் பிழிந்த
சக்கைகளை
இனிதென உண்ணும்போது
எதிரே கிடந்த
உழவுமாட்டைச்
சினேகமாய்க் கொஞ்சம்
பார்த்துச் சிரிக்கும்.

அந்தச்
சிரிப்பில்
ஏளனம் கொஞ்சம்
நிரம்பி வழியலாம்.

செக்கு மாட்டின்
அறியாமையை எண்ணி
வருந்தியது
உழவுமாடு.

உழவுமாட்டின் வாழ்க்கை
அப்படியல்ல.

காலையில்
கட்டவிழ்த்து விடக்
காலார நடப்பதும்,
காற்றில் சுகம் பெறுவதும்,
உழவு வயலில்
களைப்பாறும்போது
கரிச்சான் குஞ்சுகளோடு
கொஞ்சம் அளாவுவதும்
மீன்கொத்திக் குருவிகளின்
கூர்மூக்கை
முட்டி உடைக்க
முயற்சிப்பதும்
அருகில் ஓடும்
வாய்க்கால் நீரை
அருந்தி மகிழ்வதும்
அந்திவானம்
சிவக்கும் நேரம்,
அயர்ந்து கரையேறுவதும்
விளைந்த வயலில்
நெல்மணிகளை
நேசமாய்க் கொஞ்சம்
வாயால் சுவைப்பதும்,
அப்பப்பா !
என்ன சுகம் !
என்ன சுகம் !

நிலம் தெரியும்
தூரமெல்லாம்
தாம்
நடம் புரியும்
மேடையென மகிழ்ந்து
நீர் பட்டுத்தாவுகின்ற
தென்றலில் சுகமாய்,
நாரை ,மடையான்களின்
குலவைச் சத்தங்களினூடே
சுகத்தை
அனுபவிக்கும்
உழவுமாடு,
செக்கு மாட்டிடம்
உரிமையோடு கேட்டது
கழுத்திலென்ன
காயமென்று ?

குட்டையில் ஊறிய
மட்டையாய்ச்
செக்குமாடு
பதில் சொன்னது,
குடை ராட்டினமாய்ச்
சுற்றியதன் பரிசென்று !

நெஞ்சம்
நிறைந்த  சோகங்களோடு
செக்குமாட்டை
ஆறுதலாகத்
தம் நாவால் நக்கியது
உழவுமாடு.

கொஞ்சம்
நிமிர்ந்து பார்த்த
செக்குமாடு நினைத்தது
தம் பாதங்களைத்
தொழுவதாக.

உழவு மாடு
அதன்
அறியாமையை எண்ணிச்
சிரித்தது.

செக்குமாடு
செக்குமாடுதான்
மனிதன் போல !

இதைத்
தூரமாய் நின்று
ரசித்தது
ஒரு பூம்பூம்மாடு !

(1995- வனவிலங்குகள் வார விழாவிக்காக நாமக்கல்லில் பணியாற்றியபோது எழுதி அனுப்பியது.ஆனால் பத்திரிக்கையில் இடம் பெறவில்லை.ஏதோ ஒன்றைத் தேடிய பொழுது தானாகக் கிடைத்தது. மகிழ்ச்சியில் உங்கள் வாசிப்பில்..)