Pages

Scroll

"இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை! மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்!! மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்"!!!

Sunday, March 13, 2016

வியர்வையின் வாசம்

வியர்வையின் வாசம் 

பழுப்பேறிப்போன 
அம்மாவின் முகத்தில்
கவலை ரேகைகள்
படர்ந்து கிடந்தன.
நாட்களை எண்ணியபடி
நாடித்துடிப்பு!

அண்னாந்து பார்த்த
அம்மாவின்
கண்களில்
விட்டத்தில் ஓடும்
கடந்தகால நினைவுகள்.

ஆசையாய் ஊட்டிய
பால் பணியாரம்
வாய்க்கதுப்பின் வழி
வழிந்தோட,
அதைத்
துடைக்க நேரிடுகையில்
பருவக்கால நினைவுகள்
மெல்ல அரும்புகின்றன....

விபரம் தெரிந்த நாள் வரை
விடாப்பிடியாய்க்
குடித்து முடித்த
தாய்ப்பால்
கன்னக் கதுப்பில்
சிந்தும் போதெல்லாம்
நெடிய வியர்வையின்
நாற்றம் வீசும்
முந்தானையில் துடைத்தபடி
பாசமாய் பார்க்கும்
அம்மாவின் பார்வையில்
கனவுகள் பூக்கும்.

புல்லறுக்கச் செல்லும்போது
அம்மா
கைப்பிடித்துச் செல்கையில்
வீசிடும் பூமழையில்
அவள் முந்தானை குடையாக....
மழைத்துளியில்
சொட்டுச் சொட்டாய்
வியர்வை வாசம்
கரைந்து போகும்.

நடுங்கும் குளிர்வாடையில்
நள்ளிரவு நேரத்தில்
கிழிந்து கிடக்கும் முந்தானை
கதகதக்கும் போர்வையாகும்.

வாய்க்கால் வரப்புகளைத்
தம் காலால்
துவைத்துப் போட்டவள்
பஞ்சு மெத்தையில்
சுருண்டு கிடக்கிறாள்..
இப்போது ,

அம்மாவின் பார்வையில்
சத்து இல்லை.
அருகில் வாவென்றழைத்து
காதில் எதோ சொல்ல
முற்படுகையில்....

உடைந்து ஓடுகிற
என் கண்ணீரை
ஒற்றி எடுக்கும்
புடவைத்தலைப்பில்
வீசுகிற
வியர்வை வாசத்தில்
வலிகளைச் சுமந்து
வாழ்ந்து தொலைத்த
ஒரு மனுஷியின்
வரலாறு வாழ்கிறது.......Top of Form